பலர் தாம் ஏழையாக இருக்கிறோமே என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு அவர்கள் செல்வந்தர்களை நினைத்தும் ஏக்கம் கொள்கிறார்கள். இது தேவையற்றது. இறைவனின் சன்னிதானத்தில் ஏழைகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என்கிறது இஸ்லாம். நபிகள் நாயகம் இதுபற்றி சொல்லும்போது, ""வறுமை என்பது இறைவன் தரும் பரிசு. தன் மீது விசுவாசம் கொண்டவனுக்கு இறைவன் வறுமையையே அன்பளிப்பாக தருகிறான். வறுமை இழிவான ஒன்றல்ல. அது பெருமை தரக்கூடிய விஷயம். ஒருவனின் மறைவுக்குப் பிறகு அவன் இறைவன் முன்னிலையில் வறுமைக் கோலத்தில் நின்றால் அதை அலங்காரமாக பார்த்து ரசிக்கிறான் இறைவன்'' என்கிறார். வறுமை உங்களைத் தேடி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. எந்த வீட்டில் குழந்தைகள் திட்டப்படுகிறார்களோ அந்த வீட்டை நோக்கி வறுமை நிச்சயம் வரும். குறிப்பாக, குழந்தைகளை "நீ செத்துப்போ' என எக்காரணம் கொண்டும் திட்டக்கூடாது. நிச்சயமாக அந்த வார்த்தை வறுமையை உண்டாக்கும். அதேபோல, அளவுக்கதிகமான ஆடம்பர உடைகளை அணிபவர்களிடத்திலும், பெருமைக்காக ஆடை அணிகிறவர்களுக்கும் வறுமை உண்டாகும். உங்கள் வீட்டில் சிலந்திப் பூச்சிகள் இருந்தால் அவற்றை அகற்றி சுத்தம் செய்யுங்கள். அதனை வீட்டில் வைத்திருந்தால் அது வாழ்க்கையில் வறுமையை இழுத்து வரும்.