முஆவியா (ரலி) என்பவர் இறைவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவர்.அவருக்கு யஜீது என்ற மகன் இருந்தார். ஒருநாள் யஜீது மீது சில காரணங்களால் கோபத்துடன் இருந்தார் முஆவியா. அப்போது அஹ்னஃப் (ரலி) என்பவர் முஆவியாவைப் பார்க்க வந்தார். அவர் முஆவியாவுக்கும், அவரது மகனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதைத் புரிந்து கொண்டார். அவர் முஆவியாவிடம், ""இறை நம்பிக்கையாளரே! குழந்தைகள் நம் உள்ளங்களின் கனிகள். நமது இடுப்பில் சாய்ந்து கொள்ளும் உரிமை உடையவர்கள். நாம் பூமியைப் போல பொறுமையோடு இருந்து அவர்களுக்கு தொல்லை தராமல் நடந்து கொள்ள வேண்டும். வானம் நமக்கு நிழல் தருவது போல, நாம் அவர்களுக்கு நிழலாய் இருக்க வேண்டும். அவர்களைக் கொண்டே நாம் பலவற்றை சாதிக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதாவது கேட்டால், தாராளமாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் மனசோர்வுடன் காணப்பட்டால், அந்தச் சோர்வை நாம் போக்க வேண்டும். இப்படி செய்தால், அவர்கள் நம் மீது அன்பு செலுத்துவார்கள். நாம் சொல்வதைக் கேட்பார்கள். நாம், தாங்க முடியாத சுமையாக இருந்தால், நம்மை வெறுப்பார்கள். இன்னும் சொல்லப் போனால், நம் தந்தை சாகமாட்டாரா எனக் கூட எண்ணுவார்கள். நம் அருகிலேயே வரமாட்டார்கள்,'' என்றார். இதைக் கேட்டு முஆவியா(ரலி) மனம் தெளிந்தார். உடனடியாக தன் மகன் யஜீதுக்கு 200 திர்ஹம் பணமும், 200 ஜோடி துணிகளும் வாங்கிக் கொடுத்தார். பிள்ளைகளிடம் பாசமாய் இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது. அதேசமயம் பாசத்திற்கும் ஒரு அளவு வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒருவர் மீது மொத்தமாக அன்பை காட்டுவது, அப்படி அன்பு செலுத்தப் பட்டவர் ஏதோ சில காரணங்களால், தனக்கெதிராக திரும்பிவிட்டால், அவரையே கொலை செய்யுமளவுக்கு போவது... இப்படி வெறித்தனமாக அன்பு செலுத்துவதையும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை. உங்களுடைய பரஸ்பர அன்பு ஒரு வெறியின் வடிவமாக பிரதிபலிக்கக் கூடாது. அது உங்களுக்கு பகைமை மற்றும் தொல்லை தருவதற்கு காரணமாகி விடக்கூடாது. மக்கள் அன்பு செலுத்தும் நிலையில், குழந்தைத்தனமாக செயல்கள் புரியத் தொடங்குவார்கள். பிறகு எவராவது அருவருப்பு அடைந்தால், அவருடைய உயிர், பொருள் ஆகியவற்றை பாழ்படுத்த முற்படுவார்கள்'' என "அல்அதபுல் முஃபர்ரத்' என்ற நுõலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்ன? மகன் தன்னைக் காப்பாற்றுவான் அல்லது மகள் உதவி செய்வாள் என்ற நம்பிக்கையில், பெற்றவர்கள் தங்கள் பாசத்தை அள்ளிக் கொட்டுகின்றனர். அவர்களுக்கு திருமணமான பிறகு, மனைவி அல்லது கணவன் சொல்லைக் கேட்டோ அல்லது நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியோ, பெற்றவர்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டால், ""நன்றி கெட்ட ஜென்மமே!'' எனத் திட்டுகிறார்கள். எனவே பாசம் வைப்பதில் ஒரு அளவீடு இருக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, பாசத்தை பிள்ளைகள் மீது வைக்க வேண்டும். பாசம் அதிகம் வைப்பதும் தவறு. பாசமே இல்லாத கல்நெஞ்சர் போல் ஒதுங்கியிருப்பதும் தவறு. குழந்தைகள் மீது மட்டுமல்ல. நண்பர்களிடம் தோழமை கொள்வதற்கும் இதே அளவீட்டைக் கடைபிடிக்க வேண்டும். அப்படியானால் தான் மோதல் உருவாகாமால் இருக்கும்.