Thursday, December 13, 2007

கோபத்தைக் கொல்ல பத்து வழிகள்

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும், இனிமையையும் தொலைத்து விடுகிறோம் பல வேளைகளில். கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன. பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம்.கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும் தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. இன்றைய நாகரீக வாழ்வில் அதிகரித்து வரும் மண முறிவுகளுக்கு கோபத்தின் பங்கு பெரும்பாலானது. கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன், உடலளவிலும் மன அளவிலும் நம்மை பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. கோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்குள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம். மேலதிகாரியின் மீதான கோபம் வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது. எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும், இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பாடும். பலர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி பல விதமாகப் பேசியிருக்கிறார்கள். . அவற்றில் என்னைக் கவர்ந்த பத்து தகவல்களை இங்கே தருகிறேன். .
1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும். .
.2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ? வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம். .
.3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும். .
.4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும். .
.5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்.
. 6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். .
.7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும். .
.8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும். .
.9. பேசுங்கள். உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.
10. மன்னியுங்கள்! இந்த பண்பு இருந்தால் கோபமற்ற சூழலை உங்களால் எளிதில் உருவாக்க முடியும். புன்னகையுடன் கூடிய மன்னிப்பை வழங்கவும், மன்னிப்பு கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும் பழகுங்கள்.
.இந்த பத்து தகவல்களும் கோபத்தை அடக்க, அல்லது கோபத்தை மிதப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கை நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதை கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல், மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம். .வானம் பக்கம் வரும், .வாழ்க்கை அர்த்தப்படும்..