வடதுருவத்துக்கு அருகே ஒரு தீவில் உலக விதை பாதுகாப்புப் பெட்டகம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. உலகில் நிகழும் இயற்கைச் சீற்றம், அணு ஆயுத யுத்தங்கள், காலநிலை மாற்றம், விண்கற்களின் தாக்குதல் போன்றவற்றால் அழிந்து போகாத வகையில் இந்த பெட்டகம் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டு திறக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இந்தப் பெட்டகம் தயாரிப்புப் பணியை நார்வேஜியன் அரசு செய்கிறது. மூன்று மில்லியன் வகையான விதைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடிய அளவில் இந்த பெட்டகம் தயாராக்கப் படுகிறது. மலையில் நூற்று இருபது மீட்டர் ஆழத்தில் இந்த பெட்டகம் அமைக்கப்படுகிறது. வடதுருவப் பனி உருகினாலும் மூழ்கிப் போகாத உயரத்தில், கதிர்வீச்சு, காலநிலை போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து இந்த விதை காப்பக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சில விதைகள் இருபது, முப்பது ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும். சில ஆண்டுகள் நூற்றாண்டுகள் ஆனாலும் வீரியம் இழக்காது. இது போன்ற அனைத்து விவரங்களும் ஆராயப்பட்டு பெட்டகத்தின் அறைகள் -18 டிகிரி செண்டிகிரேட் எனுமளவில் குளிர் வசதி செய்யப்பட உள்ளன. உலகிலுள்ள அனைத்து முக்கியமாக விதைகளும் இங்கே பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.