Sunday, December 23, 2007

நற்கூலி வேண்டுமா?

ஒருமுறை நபிகள் நாயகமும் அவரது தோழர்களும் ஓரிடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்யும் வழியில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த ஒரு ஒட்டகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட நாயகம், மன வருத்தப் பட்டார். ஒட்டகத்தின் உரிமையாளர் அதை பட்டினி போட்டுள்ளதைப் புரிந்து கொண்டார். நாயகம் அந்த ஒட்டகத்தை பரிவுடன் தடவிக்கொடுத்து, உரிமையாளரை அழைத்து, ""நீங்கள் இந்த வாயில்லா ஜீவனின் துன்பம் கண்டும், அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா?'' என்றார்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிருகங்களை பட்டினி போடுவது இறைவனுக்கு எதிரான விஷயம் என்பது தான். இதற்கு மற்றொரு உதாரணமும் சொல்லலாம். ஒரு மனிதன் பயணித்துக் கொண்டிருந்த போது, வழியில் தாகம் ஏற்பட்டது. அவன் ஒரு பாழடைந்த கிணற்றிற்குள் இறங்கினான். தண்ணீர் குடித்து விட்டு மேலே வந்த அவன், ஒரு நாய் அங்கு கிடந்த ஈர மண்ணை நக்குவதைப் பார்த்தான். மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி, தோலால் செய்யப்பட்ட தனது கால்உறையில் தண்ணீர் கொண்டு வந்து, அந்த நாயின் வாயைப் பிடித்து அதற்கு தண்ணீர் புகட்டினான். இந்த நற்செயலுக்காக அல்லாஹ் அந்த மனிதனின் பாவங்களை மன்னித்தார். இதையே, ""ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதால் நற்கூலி கிடைக்கின்றது,'' என்கிறார் நபிகள் நாயகம்.