Friday, December 21, 2007

செயற்கை இருதயம் மட்டும் தொடர்ந்து இயங்குகிறது * 7 ஆண்டுக்கு முன் பொருத்தி கொண்டவர் மரணம்

பர்மிங்காம்: உலகிலேயே முதல் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்து விட்டார். ஆனால், அவரது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமை சேர்ந்தவர் ஹவ்டன். 2000வது ஆண்டில், புளு காய்ச்சல் காரணமாக ஹவ்டனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள ஜான் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் கண்டுபிடித்த செயற்கை இதயம் அதுவரை மனிதர்களிடம் பொருத்தி பரிசோதிக்கப்படவில்லை. இந்நிலையில் தான், டாக்டர் ராபர்ட் ஜார்விக் கண்டுபிடித்த செயற்கை இதயத்தை ஹவ்டனுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ஹாவ்டன் தற்காலிக செயற்கை இதயத்துடன் உயிர்வாழத் துவங்கினார். இந்த செயற்கை இதயம் தற்காலிகமாக மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. கட்டை விரல் தடிமனில், இதயத்தின் இடது அறையில் வைக்கப்படும். சிறிய ஒயர் மார்பு வழியாக காதுக்கு பின்பக்கம் வரை பொருத்தப்பட்டு அதன் முனையில் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும்.

அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, ஹவ்டனால் தொடர்ச்சியாக ஒரு மைல் துõரம் கூட நடக்க முடிந்தது. தனது அறக்கட்டளையில் சுறுசுறுப்பாக பணியாற்ற முடிந்தது. அறக்கட்டளை சார்பில் 90 மைல் நடைபயணத்தில் பங்கேற்றார். ஆல்ப்ஸ் மலையில் ஏறினார். இதய ஆராய்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தார். இரண்டு புத்தகங்களை எழுதி முடித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டினார்.

பேட்டரி மாற்றும் போதெல்லாம் மருத்துவமனையில் சேர்ந்து அதை மாற்ற வேண்டியிருந்தது. கடந்த ஆண்டில் ஹவ்டனின் இதயம் 30 சதவீதம் நல்ல நிலைக்கு திரும்பிவிட்டது. இதனால், பேட்டரி மாற்றும் வரை அவரது இதயம் தானாகவே இயங்கியது. ஒரு முறை ஹவ்டன் கடைக்கு சென்றிருந்த போது, ஒரு திருடன், ஹவ்டனின் தோள்பகுதியில் புரண்ட பேட்டரி குடுவையை, நகை என்று நினைத்து பறித்துவிட்டான். அதில் பொருத்தப்பட்டிருந்த கருவி, பெரும் சத்தத்துடன் ஒலி எழுப்பவே திருடன் பிடிபட்டான். அந்த நேரத்தில் தானே யோசித்து, குடுவையை திரும்ப ஒயருடன் இணைத்துவிட்டார் ஹவ்டன். இப்படியாக ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஹவ்டனுக்கு வயது 68. அவரது உடல் உறுப்புகள் பல செயழிலக்கவே மரணமடைந்துவிட்டார். ஆனால், அவரது செயற்கை இதயம் இயங்கிக்கொண்டு தான் இருந்தது. பேட்டரியை டாக்டர்கள் நிறுத்தினால் தான், அவர் ,இறந்துவிட்டதாக அறிவிக்க முடியும்.

ஹவ்டனின் மனைவி டியானே. இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆனால், 11 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

நன்றி : தினமலர்