‘என்ன கொடுமை சரவணன் இது’ என்று சொல்ல வைக்கிறது சமீபத்தில் சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஆபாச விளம்பரம். புதிய எஃப்.எம் விளம்பரத்துக்கான இந்தப் படங்கள் பல இலட்சம் செலவில் சென்னை நகர் முழுக்க சாலைகளின் நடுவிலும், அனைத்துப் பத்திரிகைகளின் முன்பக்கத்திலும் இடம்பெற்றுள்ளன. இருக்காதா பின்னே… நடத்தறது குமுதம் ஆச்சே !
‘பொழுதுபோக்கின் உச்சக்கட்டம்’ என்னும் துணை வாசகத்தோடும் ‘ஆஹா’ என்னும் முதன்மை வாசகத்தோடும் சென்னையில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்களில் இளம்பெண்கள், இளைஞர்கள் போன்றவர்கள் முகத்தில் ‘உச்சகட்ட’ உணர்ச்சியை வெளிப்படுத்துவது போல அமைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே பாத்ரூம் விளம்பரம் முதல் விமான விளம்பரம் வரை பெண்களின் கவர்ச்சியை முதலீடாகக் கொண்டு விளம்பரங்கள் கலாச்சாரத்தின் வேர்களை வெட்டிக் கொண்டிருக்கின்றன. இது வரை உடைகளைக் குறைக்கச் சொல்லி வருமானத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள் இப்போது உணர்ச்சிகளைப் படமெடுத்து பண உற்பத்தியில் இறங்கியிருக்கிறார்கள்.
பத்தோடு பதினொன்று அல்ல என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று திருப்பினேன்… ‘அம்மாடி.. ஆத்தாடி…’ என்று பாடிக்கொண்டிருந்தது. ஆஹா… இதுவன்றோ பொழுதுபோக்கின் உச்ச கட்டம் !
(எல்லாம் இருக்கட்டும்… .உச்சக்கட்டமா ? உச்சகட்டமா ? எது சரி ? தமிழறிஞர்கள் யாராச்சும் இருக்கீங்களா ?.. இருந்தா சொல்லுங்க !!! )