Monday, December 17, 2007

அந்தக் கால "பேஷன்'

குழந்தை பிறப்பதற்காக நேரத்தை தள்ளிப்போடுவது, குறிப்பிட்ட நட்சத்திர நாளில் ஆபரேஷன் செய்து பிரசவிப்பது என்பது இப்போது தான் பேஷன் என நினைக்காதீர்கள். புராண காலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்து, சிவனருள் பெற்று நாயன்மார்களில் ஒருவராகவும் இடம்பிடித்தவர் கோச்செங்கட் சோழர். சோழநாட்டை சுபதேவன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவரது மனைவி கமலவதி. அவர் கருவுற்றிருந்தபோது, பிரசவ வலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அரண்மனைக்கு வந்த ஜோதிடர்கள் சிலர், ""அம்மா! உங்களுக்கு பிரசவ வலி அதிகமாக இருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்து விடும் என மருத்துவச்சிகள் சொல்லி விட்டார்கள். இப்போது நேரம் நன்றாக இல்லை. ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து தான் நல்லநேரம் பிறக்கிறது. ஆகவே, ஒரேயொரு நாழிகை மட்டும் குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் பிள்ளை பிறந்தால் உலகம் போற்றும் உத்தமனாக அமைவான்,'' என்றனர். எந்தத் தாய்க்குத்தான் தன் குழந்தையை உலகம் போற்ற வேண்டும் என்ற ஆசை இருக்காது? அந்தப் புனிதத்தாய் அவ்வளவு கஷ்டத்திலும் எழுந்தாள்.

ஒரு கயிறை எடுத்துவரச் சொல்லி தன்னை தலைகீழாக ஒரு நாழிகை வரை கட்டிப்போடச் சொன்னாள். அரசி சொன்னபடியே சேவகிகளும் செய்தனர். தலைகீழாக தொங்கிய அந்த புண்ணியவதியை நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து விட்டனர். அவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் சிவ பக்தரான கோச்செங்கட்சோழ நாயனார்.