Wednesday, December 19, 2007

ஆண்களுக்கான எச்சரிக்கை !

ஆண்களின் உயிரணுக்களுக்கு எதனால் எல்லாம் பாதிப்பு வருகிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் பட்டியலிடுவதைப் பார்த்தால், ‘அப்புறம் என்னதான் பண்றது’ என்று கேட்கத் தோன்றுகிறது. 

சுடுதண்ணீரில் அதிக நேரம் குளிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு எச்சரிக்கை ! அவர்களுடைய உயிரணுக்களின் எண்ணிக்கை இதனால் பாதிக்கப்படும் என்று சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே புகைபிடித்தல், மது அருந்துதல், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தவறுதல் போன்ற பல காரணிகளால் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை சர்வதேச அளவில் பெருமளவில் குறைந்து வரும் இன்றைய சூழலில் இந்த புதிய ஆராய்ச்சி இன்னொரு அதிர்ச்சி வெடிகுண்டாக வந்து விழுகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் ஆண்களில் உயிரணு எண்ணிக்கை குறையும் என்று திடுக்கிட வைத்தார்கள். சமீபத்தில் நீரிழிவு நோய் இருந்தால் உயிரணு குறையும் என்றார்கள். இப்போது இந்த ஹாட்பாத் மேட்டர்.

இந்தியாவில் இந்த ஹாட் பாத் எனப்படும் வெந்நீரில் சுகமாகப் படுத்திருக்கும் வழக்கம் குறைவு என்றாலும் மேலை நாடுகளில் இது மிக மிக அதிகம். 

நல்ல சூடான நீர் பீச்சியடிக்கும் குளியலறைத் தொட்டிகளில், அல்லது நீச்சல்குளத்தில் அமைந்திருக்கும் தொட்டிகளில் நீண்டநேரம் ஆதாம்களாக மாறி ஹாயாகப் படுத்திருக்கும் வழக்கம் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம். எனவே இந்த ஆராய்ச்சி அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கும் தகவலே.

ஆண்களின் உயிரணுக்கள் குளிரான சூழலில் தான் ஆரோக்கியமாகவும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. அதற்காகவே ஆண்களின் உடலமைவும் அமைந்திருக்கிறது. 

ஆனால் வெதுவெதுப்பின் சுகத்தை சுகிக்க விரும்பும் மக்கள் வெப்பக் குளியலை விரும்பி வருகிறார்கள். நம்ம ஊரில் குளிர் நீர் குளியலே ஆரோக்கியம் என்று சொல்லப்பட்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணம் போலிருக்கிறது !

சுடுநீர் குளியலில் தொடர்ந்து ஈடுபடும் மக்களும் அந்த வழக்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் ஒரு சில மாதங்களிலேயே உயிரணு எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றம் காண்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சற்று வெதுவெதுப்பான ஷவரில் குளிப்பதெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர்கள் சொல்லியிருப்பது சற்று ஆறுதலான செய்தி.

எதற்கு நிறைய உயிரணுக்கள் கொஞ்சம் போதும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால், கிளம்புங்கள் ஹாட் பாத் எடுக்க ! இல்லையேல் கொஞ்சம் கவனமா இருங்க