39 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் தேள் ஒன்றின் உறைந்த படிமங்கள் செர்மனி நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் வியக்க வைக்கும் தகவல் என்னவென்றால் அந்த காலத்தில் வாழ்ந்த இந்த தேளின் நீளம் எட்டு அடி என்பதே!
மனிதனை விட உயரமான பூச்சியினங்கள் துவக்க காலத்தில் வாழ்ந்திருக்கின்றன என்னும் இந்தத் தகவல் புதிய ஆராய்ச்சிகளைத் துவங்கும் களமாக அமைந்திருக்கிறது.
இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கடல் தேளின் அதிகபட்ச நீளமே ஐம்பது செண்டீ மீட்டர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு வாழும் இந்த உயிரங்களின் அதிகபட்ச நீளமான முப்பது செண்டீ மீட்டருடன் ஒப்பிடுகையில் பழைய கால 8 அடி என்பது அதிர்ச்சிகரமான அளவாக இருக்கிறது.
அந்த காலத்தில் வாழ்ந்த கரப்பான்பூச்சி, தட்டான் போன்ற பூச்சிகளும் இத்தகைய ராட்சத உருவம் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு என்னும் சிந்தனையை இந்த படிமங்கள் கொடுத்திருக்கின்றன.
அந்த காலத்தில் நிலவிய அதிகபட்ச உயிர்வழியும், சீர்குலையாத இயற்கையும், அஞ்சி ஓடத்€ தேவையில்லாத வாழ்க்கை முறையும் அவற்றை ராட்சத உருவங்களாக உலவ விட்டிருக்கலாம் எனவும் அந்த நிலை மாற மாற அவற்றின் உருவத்திலும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஆளுக்கொரு கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் எட்டு அடி உயர தேள் ஒன்று வீட்டு சமையல் அறையில் நுழைவதைக் கற்பனை செய்து பார்த்தால் பகீரென்கிறது!