![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL1W_GzMUUlWJrwwyeL7lmwpDsad7Zm3uRRRCTYriSND_0zkW7132FfZ6QxSLub6TVeJPInwWg8OBHP8SCwPrSgt4UTkwyiowlSLCQfh6RDvSKAgKte9jHOTpgJHVQNMQow6U6uuEiWHNh/s400/PEER.jpg)
நேற்றைய தழுவல்களின்
விரல்கள் தனிமையிலும்
காது வருடுகின்றன.
மாலை நேரம்
முளைக்கும் போதில்
தாபத்தின் கனவுகளும்
வேகத்தைக் கூட்டுகின்றன.
ஆடைகளின் பாரம் தாங்காமல்
வியர்வை அவிழ்கிறது.
மோக கற்பனைகளால்
நிர்வாணமாகின்றன இரவுகள்.
போர்வைகளுக்கு வாய் முளைத்தால்
புரியும் படுக்கை அறைகளின்
ரகசிய மூச்சுகள்.
நரம்புகளுக்குள்
நகரும் நரகமாய் மேனி தேய்த்து
முன்னேறும் நாகங்கள்.
புரளல்களுக்கும் உளறல்களுக்கும்
இடையே நசுங்கி வெளியேறும் இரவு.
விடியலில் இரவு துடைத்து
கனவு கழுவி
எதுவும் நிகழா பாவனையில்
அலுவலகம் கிளம்புகையில்
கபடச் சிரிப்புடன்
கண் சிமிட்டும்
கசங்கிய தலையணைகள்.