Wednesday, April 9, 2008

காதல் என்பது என்ன?

காதல் என்பது 
வாலிப மனங்களில் 
தவறாகத்தான் 
புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது 

காதல் என்பது 
புனிதமான அர்பணிப்புதான் 
அதில் சந்தேகமே இல்லை 

ஆனால் 
ஒருவரை இன்னொருவருக்கு 
அடிமையாய் அர்ப்பணிப்பது அல்ல 
இருவரும் சேர்ந்து தங்களைக் 
காதலுக்கு அர்ப்பணிப்பது 

அப்படி 
அர்ப்பணிப்பவர்கள்தான் 
ஒருவரை ஒருவர் 
உயர்வாய் மதித்து நடப்பர் 
ஒருவரை ஒருவர் 
ஓயாது உயர்த்தி வாழ்வர் 

கண்ணுக்குள் வைத்துக் காப்பேன் 
என்று வீட்டுக்குள் வைத்து 
பட்டும் பவளமும் தந்து 
கிளிப்பிள்ளை ஆக்கமாட்டார்கள் 

மணமகளின் இடது கையை 
மணமகனின் வலது கையில் 
ஒப்படைக்க 
மணமகனின் இடது கையை 
மணமகளின் வலதுகையில் 
ஒப்படைக்கவேண்டும் 
அதுதான் வாழ்க்கை 

மற்றதெல்லாம் 
திருமணம் என்ற பெயரில் 
உறுதிசெய்யப்படும் 
அடிமைத்தனங்கள் 

தூக்கிச் சுமப்பதல்ல 
வாழ்க்கை 

இணையாகக் கைகோப்பதும் 
கைகோக்கும் வலுவினை 
தன் துணைக்குத் தானே 
உருவாக்கித் தருவதும்தான் 
வாழ்க்கை 

ஏற்றத்தாழ்வு இருந்தால் 
அது காதலே அல்ல 

சுயகௌரவத்தைச் சிதைக்கும் 
எதுவும் உறவே அல்ல